

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திப்பு
புதுடெல்லி: மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சந்தித்து பேசினார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் மோடி கடந்த செவ்வாய் கிழமை அன்று சந்தித்து பேசினார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், திரவுபதி முர்முவை நேற்று சந்தித்து பேசினார். கேரளாவை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஜார்ஜ் குரியன் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிந்ததால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவரை மாநிலங்களவைக்கு பாஜக மீண்டும் நியமிக்கவில்லை.
ரயில்வே இணையமைச்சராக இருந்த ரவ்நீத் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலமும் கடந்த 21ம் தேதி நிறைவடைந்தது. இவரும் மாநிலங்களவைக்கு மீண்டும் நிறுத்தப்படவில்லை. மத்திய அமைச்சர்கள் சிலருக்கு அவர்களது சொந்த மாநிலங்களில் கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து துறை இணையமைச்சர் ஹர்ஸ் மல்ஹோத்ரா டெல்லி பாஜக தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, உ.பி. பாஜக தலைவராக கடந்தாண்டு டிசம்பரில் நியமிக்கப்பட்டார். இதனால் மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அடுத்தடுத்து சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.