

புதுடெல்லி: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், முடிவெடுக்கும் நடைமுறைகள், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் நிபுணர் குழுவை அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான ஆணையத்தின் செயல்பாடுகளில் உள்ளதாகக் கூறப்படும் குறைபாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எடுத்த முடிவுகளுக்கு எதிராக, மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான தகவல்களையும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.