

புதுடெல்லி: கேம்பிரிட்ஜ் நகரில் உணவகத்துக்கு வந்த எனது அப்போதைய காதலி, இப்போது எனக்கு தோழியாகி விட்டார் என்று ராகுல் காந்தி சுவாரசியமாகப் பதிலளித்தார்.
தனது தாயார் சோனியா காந்தியின் நினைவுக் குறிப்புகள் அடங்கிய ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில், ராகுல் பேசியதாவது: எனது பெற்றோர் குறித்து ஏராளமான கதைகள் பேசப்பட்டன. அதில் ஒன்று, அவர்கள் கேம்பிரிட்ஜ் வார்சிட்டி உணவகத்தில் முதன்முதலில் சந்தித்துக் கொண்டது பற்றியதாகும்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் கேம்பிரிட்ஜ் நகருக்குச் சென்றிருந்தபோது, எனது காதலியிடம், ‘நாம் வார்சிட்டி உணவகத்துக்குச் செல்லலாம்’ என்று கூறினேன். எனது பெற்றோர் சந்தித்துக் கொண்ட இடத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். உணவகத்தில் அமர்ந்ததும், ஊழியர்கள் உணவுப்பட்டியலைக் கொண்டு வந்தனர்.
அப்போது நான், ‘எனது பெற்றோர் இந்த உணவகத்தில்தான் சந்தித்துக் கொண்டார்கள்’ என்று கூறினேன். உடனே, அந்த ஊழியர் என்னைப் பார்த்து, ‘ஓ, அவர்களா? எனக்கு அவர்களைத் தெரியும்’ என்றார். அந்தக் காதலி தற்போது எனக்கு தோழியாகிவிட்டார்.
இந்தப் புத்தகத்தில் நீங்கள் படிப்பது, அப்பா உயிரிழப்பதற்கு முன்பு இருந்த எனது அம்மாவைப் பற்றியது. அவர் தன்னை இரண்டு முறை, மூன்று முறை புற்றுநோயிலிருந்து மீண்டவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், உண்மையில் அவர் நான்கு முறை புற்றுநோயிலிருந்து மீண்டவர். எனது வாழ்க்கையில் ஒருமுறைகூட அவர் பயந்ததை நான் பார்த்ததில்லை.
எந்தச் சூழலிலும் அவர் பின்வாங்கியதையும் நான் பார்த்ததில்லை. இந்த உரையை நான் நிகழ்த்த விரும்பியதற்குக் காரணம், அப்பா உங்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். ஆனால், அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால், உங்களை நினைத்து எவ்வளவு பெருமைப்பட்டிருப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.