

புதுடெல்லி: கொலை வழக்கிலிருந்து குற்றவாளி விடுவிக்கப்பட்டாலும், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான திட்டங்களை வகுக்க மத்திய, மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம், பிவானி மாவட்டத்தில் கடந்த 2011-ல் சகுந்தலா, சுமன் என்ற இரு பெண்கள் குடும்ப உறுப்பினர்களான நரேஷ் மற்றும் சுபாஷ் என்பவர்களால் பொது இடத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கொலை வழக்கில், கடந்த 2013-ல், பிவானியில் உள்ள விரைவு நீதிமன்றம் நரேஷுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, மனுவை நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, கோடீஸ்வர் சிங் விசாரித்தனர். நரேஷை நீதிமன்றம் விடுவித்தது. அதேவேளையில், கொல்லப்பட்ட பெண்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க முடியுமா? என்பதை ஆராயவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குறிப்பாக, “வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டாலும், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும். மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து, இழப்பீடு திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தினர்.