

சென்னை: ராணுவப் பயன்பாட்டுக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்த இஓஎஸ்-என் 1 செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
நாட்டுக்குத் தேவையான தொலைதொடர்பு, தொலை உணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இந்திய விண வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. வணிகரீதியாகவும் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்புகிறது.
இதற்கிடையே, ராணுவப் பயன்பாட்டுக்கான இஓஎஸ்-என் 1 (‘அன்விஷா’) எனும் அதிநவீன செயற்கைக் கோளை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் மூலம்
இந்த செயற்கைக்கோள் நாளை காலை 10.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதனுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்குச் சொந்தமான 15 சிறிய செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதில் முதன்மை செயற்கைக் கோளான ‘அன்விஷா’, பூமியில் இருந்து 505 கி.மீ. உயரம் கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும்.
இது புவி கண்காணிப்பு, ராணுவ பாதுகாப்புக்கு உதவியாக உளவுப் பணிகளை மேற்கொள்ளும். இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு வலுப்பெறும். விவசாயம், நகர்ப்புற திட்டமிடல், சுற்றுச்சூழல் ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்கும் இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும்.
மற்ற செயற்கைக்கோள்களில் ‘ஆயுள்சாட்’, சென்னையைச் சேர்ந்த ஆர்பிட் எய்டு எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இது புவிவட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக் கோளில் மீண்டும் எரிபொருள் நிரப்புதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும். மேலும், ஸ்பெயின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கிய கிட் (KID - Kestrel Initial Technology Demonstrator) எனும் சிறிய விண்கலத்தை பூமிக்கு மீண்டும் தரையிறக்கும் சோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில், ராக்கெட் பயணத்துக்கான 24 மணி நேர கவுன்ட்-டவுன் இன்று காலை தொடங்க உள்ளது. மேலும் ராக்கெட் ஏவுதலுக்கு முந்தைய பரிசோதனைகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.