

சென்னை: முஸ்லிம் அல்லாத இரு உறுப்பினர்களை வாரியத்தில் சேர்க்காததால் மாநில வக்பு வாரியம் செயல்பட இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் சவுகத் அலி முகமது என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், திருத்தப்பட்ட புதிய வக்பு வாரிய சட்டத்தின் பிரிவு 14-ன்படி மொத்த உறுப்பினர்களில் இருவர் முஸ்லிம் அல்லாதவர்கள், பார் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் என குழுவில் இடம்பெற வேண்டும். ஆனால் இதை பின்பற்றி தமிழ்நாடு வக்பு வாரியம் அமைக்கப்படவில்லை என்பதால் அதன் செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி ஆஜராகி, திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்டத்தின்படி தமிழ்நாடு வக்பு வாரியம் மறுசீரமைக்கப்படவில்லை என்பதால் அதன் செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். பதிலுக்கு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் தமிழ்நாடு வக்பு வாரியம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டனர். மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் வி.டி.பாலாஜி ஆஜராகி வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு வக்பு வாரியம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நிறுத்தி வைத்தும், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் செயல்பாடுகளுக்கு தடை விதித்தும் விசாரணையை தள்ளிவைத்தனர்.