

சண்டிகர்: இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பியது தொடர்பான கழுதைப் பாதை வழக்கில், நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து பஞ்சாப், ஹரியானா மற்றும் டெல்லியில் அமலாக்கத் துறை நேற்று மீண்டும் சோதனைகளை நடத்தியது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்த 1,500-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அமெரிக்க அரசு இந்த ஆண்டு நாடு கடத்தியது. இவர்களில் பலர் கழுதைப் பாதை எனப்படும் நீண்ட மற்றும் கடினமான பயணம் மூலம் அமெரிக்காவில் நுழைந்தவர்கள் எனத் தெரியவந்தது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு பின்னால் இருந்த குற்றவாளிகள் சிலரை அமலாக்கத் துறை அடையாளம் கண்ட பிறகு கடந்த ஜூலையில் முதல்சுற்று சோதனை நடத்தியது. சமீபத்தில் பயண முகவர்கள் சிலரின் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது.
இந்நிலையில் இந்த சங்கிலித்தொடரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலையில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது. பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள ஒரு பயண நிறுவனம், டெல்லி மற்றும் பானிபட்டில் (ஹரியானா) உள்ள சிலரின் இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
கடந்த பிப்ரவரியில் அமெரிக்க அரசால் 330 இந்தியர்கள் ராணுவ சரக்கு விமானங்களில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த விசாரணையை தொடங்கியது.