

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் அஜய் பால் சர்மா. உ.பி.யில் பல ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்கி ஒடுக்கியுள்ளார். பல சமூக விரோதிகளை என்கவுன்ட்டரிலும் சுட்டுத் தள்ளியுள்ளார்.
இதனால். உ.பி.யின் சிங்கம் என்று வர்ணிக்கப்படுகிறார். இந்நிலையில் அஜய் பால் சர்மா, மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள ஃபல்டா தொகுதி தேர்தல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜஹாங்கீர் கான், தனது தொகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, வாக்காளர்களை அச்சுறுத்தும் விதமாக ஜஹாங்கீர் கான் பிரச்சாரம் செய்ததாக தெரிகிறது. அவரது பேச்சு வாக்காளர்களை பயமுறுத்தும் விதத்தில் இருந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து அங்கு தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அஜய் பால் சர்மா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அவருக்கு (ஜஹாங்கீர் கானுக்கு) சொல்லுங்கள். அவரது ஆட்களோ அல்லது ஆதரவாளர்களோ தொடர்ந்து வாக்காளர்களை அச்சுறுத்தும் விதமாக பேசினால் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதன் பின்னர் அழுவதாலோ அல்லது வருத்தப்படுவதாலோ எந்த பலனும் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜஹாங்கீர் கானை எச்சரித்து அஜய் பால் சர்மா வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கு பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறும்போது, “உத்தர பிரதேசத்தின் சிங்கம் அஜய் பால் சர்மா. இந்த ஜஹாங்கீர் கான், முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு நெருக்கமானவர்.
ஜஹாங்கீர் கானின் குடும்பத்தினருக்கு அஜய் பால் சர்மா, கடுமையாக எச்சரிக்கை விடுத்து, சூழலைத் தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதில் சிறிதும் காலம் தாழ்த்தவில்லை. அவருக்கு எனது பாராட்டுகள். அஜய் பால் சர்மா விடுத்துள்ள எச்சரிக்கைச் செய்தி, தெளிவாகவும், அதே நேரத்தில் கம்பீரமாகவும் உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கும் நிலைநாட்டப்படும், மேலும் தேர்தல் செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பவர்களுக்கு இது எச்சரிக்கைதான்" என்றார்.