“தகுதியுடைய வாக்காளர்களின் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்க” - தேர்தல் ஆணையத்துக்கு ஒவைசி வேண்டுகோள்

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி

Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எஸ்ஐஆர் பணியில் தகுதி படைத்த உரிய வாக்காளர்கள் அனைவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தி உள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நாளை (ஜூன் 15) முதல் தொடங்கவுள்ளதாக தகவல். சுமார் ஒரு மாத காலம் இந்த பணியை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) வீடு, வீடாக சென்று மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாத இறுதியில் வாக்காளர் வரைவு பட்டியலும், அக்டோபர் முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, “வாக்களிக்கும் உரிமை என்பது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் ஒன்று என நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக ஏழை எளிய மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டால் அவர்களிடம் வேறென்ன இருக்கும். அதனால் தான் தகுதி படைத்த உரிய வாக்காளர்கள் அனைவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த எஸ்ஐஆர் பணியில் வாக்காளர்களிடம் 2002-ம் ஆண்டின் தரவுகள் கேட்கப்படுகிறது. வாக்காளர்கள் அந்த விவரத்தை தருவார்கள் என எதிர்பார்ப்பது கடினமான ஒன்று. எனது தொகுதியில் 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் எல்லோரையும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் அணுக வேண்டும்.

இருந்தாலும் ஒரு மாத காலத்தில் ஹைதராபாத்தில் இதை மேற்கொள்வது கடினம். இப்போது மழைக்காலம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதன் காரணமாக தகுதி படைத்த உரிய வாக்காளர் பெயரை பட்டியலில் சேர்க்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் கோருகிறோம்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் தான் தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோக பாதிப்புக்கு காரணம். அவர்கள் மேற்காசியாவில் போர் தொடுத்தனர். தற்போது இந்தியா உட்பட உலக மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சிரமத்துக்கு அவர்கள் இருவரே காரணம்” என்றார்.

<div class="paragraphs"><p>ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி</p></div>
ஃபோலரின் பலோகன் அசத்தல் ஆட்டம்: பராகுவே அணியை பந்தாடியது அமெரிக்கா | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in