

ராம்கர்: ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோலா வனப்பகுதியில் இருந்து ஒரு யானைக் கூட்டம் அருகில் உள்ள பாண்டா கிராமத்துக்குள் நுழைந்தது. இங்கு செங்கல் சூளையில் பணியாற்றும் 2 பேரை காட்டு யானைகள் விரட்டி தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இதேபோல் முர்பா கிராமத்தைச் சேர்ந்த ஒருவரையும் காட்டு யானைகள் தாக்கி கொன்றன.
இதுகுறித்து ராம்கர் வனத்துறை அதிகாரி நிதிஷ் குமார் கூறுகையில், ‘‘5 காட்டு யானைகள் ஒரு குழுவாக கடந்த ஜனவரி மாதம் முதல் கிராமப் பகுதிக்குள் சுற்றி வருகின்றன. லூகு மலைப் பகுதிக்குச் சென்ற காட்டு யானைகள் மீண்டும் கிராமப் பகுதிகளுக்குள் திரும்பியுள்ளன. யானைகள் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் ரூ.25,000 நிதி அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
செங்கல் சூளை உரிமையாளரும் இறந்த ஊழியர்கள் இருவருக்கும் தலா ரூ.40,000 நிதியுதவி அறிவித்தார். ஆனால், இதை அவர்களது குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். காட்டு யானைகளின் தாக்குதலைத் தடுக்க உடனடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இறந்தவர்களின் உடலைப் பெற்றுக் கொள்ளவும் அவர்கள் மறுத்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்குப் போலீஸார் அனுப்பினர்.