

டி.கே.சிவகுமார்
பெங்களூரு: கர்நாடகாவில் 2 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
கர்நாடகாவில் பாகல் கோட்டை, தாவணகெரே தெற்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு வருகிற 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் காங்கிரஸ் சார்பில் உமேஷ் மேத்தி (பாகல்கோட்டை), சமர்த் மல்லிகார்ஜூன் (தாவணகெரே தெற்கு) ஆகியோரை களமிறக்கியுள்ள நிலையில், பாஜக சார்பில் வீரபத்ரையா சரடிமத் (பாகல்கோட்டை), சீனிவாசா தாசகரியப்பா (தாவணகெரே தெற்கு) ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத, பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸூம் பாஜகவும் நேருக்கு நேர் மோதுவதால் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்களும், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று பாகல்கோட்டையில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களது ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட இலவச திட்டங்களால் ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைந்துள்ளனர். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். அவர்களின் முகத்தில் தென்படும் புன்னகையே தேர்தல் முடிவை சொல்லி விடுகிறது.
இந்த இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. பாஜக முன்பைவிட குறைவான வாக்குகளைப் பெற்று தோல்வி அடையும். இந்த இரு தொகுதிகளும் காங்கிரஸின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.