

புதுடெல்லி: மக்களவையில் நேற்று மத்திய மின்சாரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத நாயக் கூறியதாவது:
மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது. மின்சாரத்தை விநியோகிக்கும் பணியில் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மிகவும் முக்கியக் காரணியாக உள்ளன. இந்த நிறுவனங்கள்தான், மின்சாரத்தை உற்பத்தி செய்வது, கொண்டு செல்வது, விநியோகிப்பது ஆகிய பணிகளைச் செய்கின்றன.
இந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் வகையில், செலவை பிரதிபலிக்கும் கட்டணத்தை நிர்ணயிக்கும் விதியை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. புதிய கட்டணமானது, மின்சார விநியோகத்தில் உள்ள அனைத்துச் செலவுகளையும் பிரதிபலிக்கும். இதுதொடா்பான மசோதா, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்.
மசோதாவை சுமுகமாக நிறைவேற்றுவதற்கு ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த மசோதாவில் செலவினங்களை பிரதிபலிக்கும் கட்டணங்கள், மின் விநியோக நிறுவனங்கள் தாமே மின்சாரக் கட்டணத்தை நிர்ணயிக்க வகை செய்யும் அம்சங்கள், மின்சாரக் கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அமைப்புகள் ஆகியவை குறி்த்த ஷரத்துகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அமைச்சர் ஸ்ரீபாத நாயக் கூறினார்.