

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில், கடந்த 2023 டிசம்பரில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டதிருத்தத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக, பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர் குழுவில் இடம்பெறுவார் என்ற அம்சம் சேர்க்கப்பட்டது.
புதிய சட்டத்தின்படி தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி, ஜெயா தாக்குர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்தால் ஆதாய முரண் குற்றச்சாட்டு எழுமென்று குறிப்பிட்டு, விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி விலகினார். மேலும் எதிர்காலத்தில் தலைமை நீதிபதி அல்லாத பிற நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இந்த மனுவை பட்டியலிடவும் உத்தரவிட்டார்.