“தலைமைத் தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை தேவை” - பிரியங்கா காந்தி

“தலைமைத் தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை தேவை” - பிரியங்கா காந்தி
Updated on
1 min read

வயநாடு: சட்டவிரோதச் செயல்கள் நடந்திருந்தால், மற்ற குற்றவாளிகளைப் போலவே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவின் வயநாடு தொகுதி எம்பியான காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, வயநாடுக்கு அருகில் உள்ள கல்பெட்டாவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “நமது ஜனநாயக நடைமுறையைச் சிதைக்க முயலும் எவரும் இந்த நாட்டுக்கு தீங்கு இழைக்கிறார்கள் என்றே அர்த்தம். இதுவே எங்களின் மிகத் தெளிவான நிலைப்பாடு.

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருப்பவருக்கு இப்போதுள்ளதைப் போன்ற சட்டப் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை.

வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்வது, பெருமளவிலான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது கடுமையான குற்றம். வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் நாட்டுக்கு எதிரான குற்றச் செயல்களாகும்.

முறைகேடுகள் குறித்து தெரிந்திருந்தும், சக ஆணையர்கள் அதுபற்றித் தகவல் தெரிவித்தும் அவற்றை அவர் தொடர்ந்து அனுமதித்திருந்தால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சட்டவிரோதச் செயல்கள் தனது கண் முன்பாக நடப்பது தெரிந்தும், சக ஆணையர்கள் அதைச் சுட்டிக்காட்டியும் அதை புறக்கணித்து வேண்டுமென்றே நியாயமற்ற தேர்தல் நடைபெற அனுமதித்திருந்தால், மற்ற குற்றவாளிகளைப் போலவே அவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் அவர் விசாரிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் நடைமுறைகள் மற்றும் சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை தொடர்பான முடிவுகள் மற்றும் உத்தரவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனைகளைத் தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியை அடுத்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரியங்கா காந்தி கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதனிடையே, இன்று மாலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் வலிமையான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தலைமைத் தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை தேவை” - பிரியங்கா காந்தி
ஐஐடி மும்பை மாணவர் தற்கொலை விவகாரம்: பெற்றோருக்கு ராகுல் காந்தி ஆறுதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in