

லக்னோ: உத்தர பிரதேசத்தில் எஸ்ஐஆர் பணிக்காக பிஎல்ஓ-வை தொடர்புகொள்ளுங்கள் என்ற சேவையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலி்ல் 12.55 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர். உயிரிழப்பு, நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தது, இரண்டு இடங்களில் பெயர் இருந்தது ஆகிய காரணங்களால் 2.89 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் ஆட்சேபணை தெரிவிக்கவும் புதிதாக பெயர்களை சேர்க்கவும் வரும் பிப்ரவரி 6-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிஎல்ஓ-வை தொடர்பு கொள்ளுங்கள் என்ற சேவையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் அல்லது திருத்தம் உள்ளிட்ட தகவல்கள் அல்லது உதவியைப் பெற, வாக்காளர்கள் இப்போது அந்தந்த வாக்குச்சாவடி நிலை அதிகாரியுடன் (பிஎல்ஓ) தொலைபேசி அழைப்பை முன்பதிவு செய்யலாம். 48 மணி நேரத்தில் பிஎல்ஓ தொடர்பு கொண்டு தேவையான வழிகாட்டுதலை வழங்குவார்’’ என கூறப்பட்டுள்ளது.