ஐ-பேக் அலுவலகத்தில் சோதனை: உச்ச நீதிமன்றத்தில் மே.வங்க அரசு கேவியட் மனு
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வியூக நிறுவனமாக ஐ-பேக் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் நிறுவனம், அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை சோதனை நடத்தினர். நிலக்கரி ஊழல் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இந்த சோதனை நடைபெற்றது.
சோதனை நடைபெற்ற இடங்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நுழைந்து, ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை எடுத்துச் சென்றதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி கொல்கத்தா உயர் நீதி மன்றத்தை அமலாக்கத் துறை அணுகியது.
இந்நிலையில் ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக, தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு நேற்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
