மாநிலங்களவை | கோப்புப் படம்
புதுடெல்லி: ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் உட்பட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 24 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், சி.வி. சண்முகம், சுனேத்ரா பவார் ஆகியோரின் ராஜினாமாவை அடுத்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலும் இதே தேதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு ஆண்டுகளைக் கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நிறைவு செய்தவர்களுக்கு மாற்றாக புதிய உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் குரியன், ரவ்னீத் சிங் உள்ளிட்ட 24 பேர் அடுத்த மாதம் தங்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளனர். இதன் காரணமாக, புதிதாக 24 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் தலா 4 இடங்களுக்கும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்களுக்கும், ஜார்க்கண்ட்டில் 2 இடங்களுக்கும், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அதோடு, தமிழகத்தில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவைப் பதவியை ராஜினாமா செய்ததாலும், மகாராஷ்டிராவின் துணை முதல்வர் சுனேத்ரா பவார் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாலும் இவ்விரு மாநிலங்களிலும் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர் பதவிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேர்தல் அறிவிக்கை ஜூன் 1ம் தேதி வெளியிடப்படும். அன்று தேர்தல் நடைமுறைகள் முறையாக தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 8 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு ஜூன் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்று மாலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். நள்ளிரவுக்குள் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.