

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 74 வயது முதியவருக்கு, கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி தெரியாத எண்ணில் வாட்ஸ் அப் மூலம் அழைப்பு வந்துள்ளது. போனில் பேசியவர்கள் தங்களை ஆர்பிஐ அதிகாரிகள் என்றும் போலீஸ் அதிகாரிகள் என்றும் அறிமுகம் செய்து கொண்டுள்ளனர்.
மேலும், அந்த முதியவர் போலி ஆதார் எண் மற்றும் போலி வங்கிக் கணக்கு மூலம் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதுகுறித்து ஆர்பிஐ அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் என்றும் மிரட்டினர். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முதியவர், அவர்கள் கூறியபடி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு லட்சக்கணக்கில் முதியவர் பணம் அனுப்பி உள்ளார்.
முதியவரின் சகோதரியின் தபால் அலுவலக நிரந்தர வைப்பு தொகையையும் அந்த மோசடி கும்பல் பறித்துள்ளது. மேலும், முதியவரும் அவரது சகோதரியும் வெளியில் செல்லக் கூடாது என்றும் போலீஸார் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறி மிரட்டியுள்ளனர். முதியவர்களிடம் இருந்து அந்த கும்பல் மொத்தம் ரூ.80.50 லட்சம் பணத்தை சுருட்டி உள்ளது.
அதன்பிறகு, நவம்பர் 29-ம் தேதி மீண்டும் வாட்ஸ் அப் மூலம் வேறு ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், நீங்கள் போலீஸ் நிலையத்துக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி முதியவரும் போலீஸ் நிலையத்துக்கு சென்றபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.