

மும்பை: மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள டைவேகர் கடற்கரை பிரபல சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
புனே மாவட்டத்தின் ஆலந்தியில் செயல்படும் தனியார் பயிற்சி மையமான வின்னர்ஸ் அகாடமியைச் சேர்ந்த 25 மாணவர்கள், 17 மாணவிகள் மற்றும் 6 ஆசிரியர்கள் என 48 பேர் கொண்ட குழு நேற்று மாலை இந்த கடற்கரைக்கு சுற்றுலா சென்றது.
அப்போது, அவர்களில் 8 மாணவர்கள் கடலில் இறங்கினர். அவர்களை கடல் அலை உள்ளே இழுத்துச் சென்றது.
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் வாட்டர் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பாவ் சலுங்கே தனது குழுவினருடன் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டார்.
எனினும் அதற்குள் மாணவர்கள் 8 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் 16 வயது சிறுவர்கள் என போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சுற்றுலா ஏற்பாடு செய்த கல்வி நிறுவனத்தால் பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் மேற்பார்வை நெறிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது உள்பட அனைத்தும் விரிவாக விசாரிக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.