

புதுடெல்லி: மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது, 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதல் குறித்து, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனேவின் நினைவுக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டு வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேச முயன்றார். அப்போது, ராகுல் காந்தி அவையைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது. விவாதத்துக்காகப் பட்டியலிடப்பட்ட தலைப்பில் இந்தியாவோ அல்லது சீனாவோ இடம்பெறவில்லை, எனவே, கொடுக்கப்பட்டுள்ள தலைப்பின் கீழ் பேசும்படி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார். அதைக் கேட்காமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மக்களவை நேற்று கூடியதும், ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் இருக்கை அருகில் சென்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்கள் காகிதங்களை கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, மக்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட காரணத்துக்காக 374-வது பிரிவின் கீழ் இந்த அமர்வில் இருந்து 8 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு தீர்மானம் கொண்டு வந்தார்.
குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், தமிழக எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் மற்றும் குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ் உள்ளிட்ட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அவையில் அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட கடும் அமளியால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
ஜனநாயகத்துக்கு களங்கம்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், “இன்று (செவ்வாய்க்கிழமை) மக்களவையில் நான் பேசுவதைத் தடுத்தது இந்த அவையின் மரபை மீறும் செயல். அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற எனது தகுதியில் தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் நான் பேசுவதைத் தடுப்பதற்கு ஒரு திட்டமிட்ட முயற்சியாகவே இது உள்ளது. இது தீவிரமான கவலையை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு என்பது குடியரசுத் தலைவர் உரையின் ஒரு முக்கிய பகுதியாகும், அதற்கு நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.