நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க முயற்சி: வெளியுறவு செயலருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க முயற்சி: வெளியுறவு செயலருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு
Updated on
2 min read

புதுடெல்லி: நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியைச் சந்தித்து ஆதவ் அர்ஜுனா தலைமையிலான தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

நேபாள வெள்ளத்தில், தஞ்​சாவூர், திரு​வாரூர், மயிலாடுதுறை உள்​ளிட்ட பல மாவட்​டங்​களைச் சேர்ந்த 57 பேர், கும்​பகோணத்​தைச் சேர்ந்த ‘சூப்​பர் யாத்ரா டிராவல்ஸ்’ நிறு​வனம் மூலம் கடந்த 23-ம் தேதி இரவு கைலாய யாத்​திரைக்​குச் சென்​றுள்​ளனர். அவர்​கள் நேபாள வெள்​ளத்​தில் சிக்கி உள்​ளனர்.

எனினும், வெள்​ளத்​தில் இருந்து தப்​பிய 20 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டுள்​ளனர். மேலும், வெள்​ளத்​தில் சிக்​கிய​வர்​களில் கடலூரைச் சேர்ந்த திரு​மாவளவன் (62) என்​பவர் நேற்று பாது​காப்​பாக மீட்​கப்​பட்​டார்.

மீட்​கப்​பட்ட 21 பேரும் தற்​போது திரிசூலி பகு​தி​யில் பாது​காப்​பாகத் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். மீத​முள்​ள 36 பேரைத் தேடும் பணி​ தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மீட்​கப்​பட்​டுள்ள 21 தமி​ழர்​களை தாயகம் அழைத்து வர ஏற்​பாடு​ செய்​ய​வும், தொடர்பு கொள்ள இயலாதவர்​களின் நிலை​யைக் கண்​டறிந்து மீட்​புப் பணி​களைத் துரிதப்படுத்த​வும் தமிழக முதல்வரின் உத்தரவுக்கு இணங்க, பொதுப்​ பணித் துறை அமைச்​சர் ஆதவ் அர்ஜுனா​, பள்​ளிக் கல்வி அமைச்​சர் ராஜ்மோகன், வெளிநாடு வாழ் தமி​ழர் நலத்​துறை அமைச்​சர் க.தென்னரசு, வேளாண் துறை அமைச்​சர் ர.வினோத் மற்றும் அயல​கத் தமி​ழர் நலன் மற்​றும் மறு​வாழ்​வுத் துறை இயக்​குநர் ரெ.சதீஸ் ஆகி​யோர் டெல்லி சென்றுள்ளனர்.

டெல்லி தமிழ்​நாடு இல்​லத்​தில் முகாமிட்​டு, மீட்​புப் பணி​கள் தொடர்​பான நடவடிக்​கை​களை மேற்​பார்​வையிட்டு வரும் அவர்கள், இன்று இது தொடர்பாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும் மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விக்ரம் மிஸ்ரி அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும், இந்திய குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவ 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் வெளியுறவுத் துறையின் சூழ்நிலை கண்காணிப்பு அறையை தமிழக அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

முன்னதாக, நேபாள வெள்ளப் பாதிப்பு தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், நேபாளத்துக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, வெளியுறவுத் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை குறித்து ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நேபாளத்தில் தற்போது நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து இன்று விவாதிக்கப்பட்டது. காத்மாண்டு மற்றும் பெய்ஜிங்கில் உள்ள நமது தூதரகங்கள், அங்குள்ள இந்தியக் குடிமக்களின் நிலை மற்றும் நல்வாழ்வு குறித்த தகவல்களை வழங்கியுள்ளன.

நேபாளத்துக்கு அனுப்பப்படவுள்ள கூடுதல் நிவாரணப் பொருட்கள் குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் தொடர்புடைய பிரிவுகள் எங்களுக்குத் தெரிவித்தன. இப்பிரச்சினைக்கு நாங்கள் அதி முக்கியத்துவம் அளித்து வருகிறோம்” என தெரிவித்திருந்தார்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க முயற்சி: வெளியுறவு செயலருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு
“நேபாள வெள்ளப் பெருக்கு பிரச்சினைக்கு அதி முக்கியத்துவம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in