புதுடெல்லி: திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் தயாரித்து விநியோகித்த விவகாரத்தில் சுக்ரிதி ஃபுட்ஸ் நிறுவன உரிமையாளர் கைலாஷ் சந்த் மங்லாவை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக சுக்ரிதி ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கைலாஷ் சந்த் மங்லா கடந்த 17-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டத்துக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
அக்மார்க் உயர் தர பசு நெய் என்ற பெயரில் திருப்பதி லட்டு பிரசாதத்துக்கு பயன்படுத்த விநியோகிக்கப்பட்ட நெய், உண்மையில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பாமோலின் மற்றும் மோனோகிளிசரைடுகள், மைவாசெட் சாஃப்ட் 400, அசிடிக் அமில எஸ்டர் உள்ளிட்ட ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
2019-க்கும் 2024-க்கும் இடைப்பட்ட காலத்தில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு சுக்ரிதி ஃபுட்ஸ் நிறுவனம் ரூ.230 கோடி அளவுக்கு நெய் விநியோகித்துள்ளது. இதன் உண்மையான மதிப்பு ரூ.96 கோடி மட்டுமே.
ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி ஸ்பெஷாலிட்டிஸ், மல்கங்கா மில்க் & அக்ரோ ப்ராடக்ட்ஸ், ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் உள்ளிட்ட பல்வேறு போலி நிறுவனங்கள் மூலம் கலப்பட நெய் விநியோகத்தை கைலாஷ் சந்த் மங்லா ஒருங்கிணைத்துள்ளார்.
கலப்பட பொருட்கள் பயன்படுத்தப்பட்ட விவரங்களை மறைக்க, உண்மையான பசு நெய் உற்பத்தி மற்றும் விநியோகம் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க போலியான ஆவணங்களை கைலாஷ் சந்த் மங்லா உருவாக்கி உள்ளார்.
இதேபோன்ற குற்றச்சாட்டின் பேரில், போலே பாபா ஆர்கானிக் டெய்ரி மில்க் நிறுவனத்தின் உரிமையாளரும் இயக்குநருமான விபின் ஜெயின், அமலாக்கத்துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது கைலாஷ் சந்த் மங்லா கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.