

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வதற்காக தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சியின் ஐடி விங் உருவாக்கிய மொபைல் செயலிகளைப் பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது: “தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்ப்புப் பணியை நடத்துவதற்காக அனைத்து விதமான தவறான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தகுதியுள்ள வாக்காளர்களை 'இறந்தவர்கள்' என்று குறிப்பதுடன், முதியவர்கள், நோயுற்றவர்களை விசாரணைுக்கு வருமாறு கட்டாயப்படுத்துகிறது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதற்காக அவர்கள் பயன்படுத்தும் செயலிகள், பாஜகவின் ஐடி பிரிவோடு தொடர்புடைய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை.
இந்த விஷயத்தில் மக்கள் கவனமாக இருக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். உதவி தேவைப்படுபவர்களுக்கு நீங்கள் துணையாக நிற்க வேண்டும். நீங்கள் எனக்கு ஆதரவளிக்கத் தேவையில்லை. இந்த நடவடிக்கையால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளவர்களுக்கு மட்டும் ஆதரவளியுங்கள்.
தேர்தல் ஆணையம் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குச் சாதகமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். இதன் மூலம் வாக்காளர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட வாய்ப்புள்ளது. இது தேர்தலின் நடுநிலைமையைக் குலைக்கும் செயல். இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் இதுவரை விரிவான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றாலும், பொதுவாகத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் அனைத்து மென்பொருள்களும் தேசிய தகவல் மையத்தின் பாதுகாப்பில் இருக்கும் என்றே கூறப்படுகிறது. இருப்பினும், மம்தாவின் இந்தப் புகார் தேசிய அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.