

கோப்புப்படம்
புதுடெல்லி: குறுகிய தூர இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
ராணுவத்துக்குத் தேவையான ஏவுகணைகள், துப்பாக்கிகள் உட்பட பல்வேறு ஆயுதங்களை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) தயாரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது குறுகிய தூர எதிரி இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடல் பகுதியில் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
‘விஷார்ட்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்த வகை ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணையை மனிதர்கள் எளிதாக சுமந்து செல்ல முடியும். இதை டிஆர்டிஓ.வின் இம்ராத் ஆய்வு மையம், மற்ற டிஆர்டிஓ ஆய்வு மையங்கள், இந்திய தொழிற்துறை நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி உள்ளது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘குறுகிய தூர எதிரி இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் 3 ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டன. அவை மிகத் துல்லியமாக செயல்பட்டு இலக்கை அழித்தது.
இந்த சோதனை முழு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், வெவ்வேறு வேகத்தில், வெவ்வேறு உயரத்தில் பறந்து வரும் எதிரிகளின் விமானம், ஏவுகணை, ட்ரோன்கள் என எதுவாக இருந்தாலும், நமது குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழிக்கும்’’ என்று தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின் போது அதிவேகமாக பறந்து வந்த வான் இலக்குகளை குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தாக்கி அழித்துள்ளன. இந்த சோதனை வெற்றி பெற்றதற்கு டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த வகை ஏவுகணைகள் ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளன.