

ஹைதராபாத்: அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250-வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஹைதராபாத் நிதி மாவட்டத்தில் உள்ள சாலையின் பெயரைத் தெலங்கானா அரசு சில நாட்களுக்கு முன் டொனால்டு ட்ரம்ப் அவென்யூ என்று அதிகாரப்பூர்வமாக மாற்றியது.
இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "இந்தியாவின் ஹைதராபாத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய ‘டொனால்டு ட்ரம்ப் அவென்யூ' - இந்த முறையில் கவுரவிக்கப்படும் முதல் அமெரிக்க அதிபர் நான். மிக்க நன்றி!” என்று கூறியுள்ளார்.
தெலங்கானா துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் லாரா வில்லியம்ஸ் ஆகியோர் இந்த பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தனர்.
தெலங்கானா- அமெரிக்கா இடையிலான வளர்ந்து வரும் வணிக மற்றும் முதலீட்டு உறவுகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெலங்கானா அதிகாரிகள் தெரிவித்தனர்.