ம.பி.யில் ஆதிவாசி நலத்துறை மேலாளர் வீட்டில் ரூ.4.69 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் தர் மாவட்டம் லபாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் கோவர்தன்லால் மாரு (படேல்). இவர் மாநில ஆதிவாசி ஜதி சேவா சஹாகாரி சமிதியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்துள்ளதாக ஏராளமான புகார்கள் எழுந்தன.
இதையடுத்து இந்தூரில் இருந்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திடீரென லபாரியா கிராமத்துக்கு சென்றனர். அதிகாரிகள் 3 பிரிவாக சென்று கோவர்தன் லாலின் 2 மாடி வீடு, பண்ணை வீடு, கிடங்கு, அலுவலகம், விவசாய நிலத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களில் ஒரே நேரத்தில் தீவிரமாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை 12 மணி நேரம் நடைபெற்றது. அப்போது, இந்த சோதனையில் ரூ.4.69 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரொக்கம் ரூ.2 லட்சத்து 41,150, 145 கிராம் தங்கம்,
1.23 கிலோ வெள்ளி ஆகியவை கைப்பற்றப்பட்டன. அத்துடன், விலையுயர்ந்த மரச்சாமான்கள், ரூ.16.98 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவர்தன் லால் கடந்த 1984-ம் ஆண்டு சாதாரண விற்பனையாளராக பணியாற்றி உள்ளார். அப்போது அவர் மாதம் ரூ.300 மட்டுமே வருவாய் ஈட்டியுள்ளார். இதுவரை அவர் ஈட்டிய வருவாய் மற்றும் அவரது மூதாதையர்கள் சொத்தின் மதிப்பு இப்போது ரூ.1.2 கோடியாக உள்ளது. ஆனால், வருவாய்க்கு அதிகமாக அவரிடம் ரூ.4.69 கோடிக்கு சொத்துகள் உள்ளன என்று அதிகாரிகள் கூறினர். அத்துடன் 8 ஏக்கர் நிலமும் அவர் வைத்துள்ளார். சோதனை முடிவில் முழு விவரங்கள் தெரிய வரும் என்று லோக் ஆயுக்தா டிஎஸ்பி சுனில் தலான் தெரிவித்தார்.
