

சூரத்: குஜராத்தின் சூரத்திலுள்ள மதரசாவில் பிஹாரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நாஜிஷ் படித்து வந்தான். வகுப்பு முடிந்ததும், அவன் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள பள்ளிவாசலின் 3-வது மாடிக்கு விளையாடச் சென்றுள்ளான்.
அப்போது, கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து பக்கத்து கட்டிடத்துக்குத் தாவ முயன்றபோது தவறிக் கீழே விழுந்தான். அதில், அங்கிருந்த கூர்மையான இரும்புக் கம்பி அவனது தோள்பட்டையில் குத்தி, வாய் வழியாக வெளியே வந்தது.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் கம்பியைத் துண்டித்து, வாயில் கம்பி நீட்டிய நிலையிலேயே சிறுவனை சூரத் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, அவனது உட்புறக் காயங்களைக் கண்டறிய சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
வாயில் கம்பி இருந்ததால் மயக்க மருந்து கொடுப்பது சவாலாக இருந்தது. இருப்பினும், மயக்கவியல் நிபுணர்கள் சுவாசப் பாதையைச் சீரமைத்த பின், பிளாஸ்டிக் மற்றும் காது-மூக்கு-தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் தீவிர அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சிகிச்சையில், ரத்த நாளங்களுக்குப் பாதிப்பில்லாமல் கம்பி பாதுகாப்பாக அகற்றப்பட்டு, காயங்களுக்கும் தையலிடப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சிறுவன் நாஜிஷ் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.