

புதுடெல்லி: கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு முடிவுகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தினார்.
மாநிலங்களவையில் நேற்று பூஜ்யநேரத்தின்போது திருச்சி சிவா பேசியதாவது: தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள கீழடி பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் இந்த ஆய்வுகள் தொல்பொருள் ஆய்வாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் நடத்தப்பட்டு வந்தன.
ஆய்வு தொடங்கிய 2 ஆண்டுகளிலேயே அங்கு பழங்காலத்தைச் சேர்ந்த 7,500 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் 2 ஆண்டுகளிலேயே கே.அமர்நாத் ராமகிருஷ்ணா இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து கீழடியில் ஆய்வு நிறுத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2017-ல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு அங்கு கூடுதலாக 15,000 பழங்காலப் பொருட்கள் அகழாய்வு மூலம் சேகரிக்கப்பட்டன.
2021-ல் அமர்நாத் ராமகிருஷ்ணா, சென்னை மண்டல தொல்பொருள் ஆய்வுத்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றபோது 988 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த அறிக்கை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் அவை இதுவரை வெளியிடப்படவில்லை.
இது தமிழ் மக்கள் தங்களின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை மறுப்பது போலாகும். எனவே, கீழடி ஆய்வு முடிவுகள் தொடர்பான தொல்பொருள் ஆய்வாளரின் அறிக்கையை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.