

புதுடெல்லி: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று கடும் அமளி ஏற்பட்டது. மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் இருந்த திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி இரு அவைகளிலும் திமுக கூட்டணி எம்.பி.க்கள் நேற்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். ஆனால் இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.
மக்களவையில் திமுக உறுப்பினர்களின் கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்தார். திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் அதை அவையில் விவாதிக்க முடியாது என்றார். இதையடுத்து திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதன் பிறகு மக்களவை கூடியபோதும் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், “திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சிலர் பிரச்சினையை உருவாக்க விரும்பினர். வகுப்புவாத சக்திகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. 2014-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அந்த தீர்ப்பு வகுப்புவாத சக்திகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது" என்றார். மேலும் திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த தனி நீதிபதி குறித்து சில கருத்துகளை அவர் தெரிவித்தார்.
அமைச்சர் கண்டனம்: இதற்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, "நீங்கள் சொல்வதை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் நீங்கள் நீதித்துறைக்கு எதிராகப் பேச முடியாது. இது முன்னெப்போதும் இல்லாதது. ஒவ்வொரு உறுப்பினரும் அவர்கள் விரும்பியதை பேச அனுமதித்தால், அவை இயங்க முடியாது” என்று அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதி குறித்து டி.ஆர்.பாலு பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்து பேசும்போது. "மக்கள் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், காவல்துறை அந்த மக்களை தாக்க முயன்றது. நீதிமன்றம் உத்தரவிட்டும் பக்தர்களுக்கு தமிழக அரசு போலீஸ் பாதுகாப்பை வழங்கவில்லை. பக்தர்களை அனுமதிக்கவும் இல்லை. தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக இயங்கி வருகிறது" என்றார்.
பாசிச போக்கு: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கூறும்போது, "முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கை ஜனநாயகமற்றது, பாசிச போக்கு கொண்டது. தமிழக பாஜக மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்த நடவடிக்கை, திமுகவின் ஜனநாயக விரோத போக்கை காட்டுகிறது. தமிழக மக்கள் இந்த பாசிச அரசாங்கத்தை வெளியேற்றி, மாற்றம் கொண்டுவர உறுதியாக உள்ளனர்" என்றார்.
மாநிலங்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக உறுப்பினர்களின் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக கூட்டணி எம்.பி.க்கள் தொடர் முழக்கம் எழுப்பினர். பிறகு அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.