

பெங்களூரு: கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் இன்று மாலை பதவியேற்கிறார். இந்நிலையில் துணை முதல்வர், அமைச்சர் பதவி வழங்கக்கோரி மூத்த தலைவர்கள் காங்கிரஸ் மேலிடத்துக்கு அழுத்தம் தருவதால் அமைச்சரவை பட்டியல் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா காங்கிரஸ் மேலிடத்தின் வலியுறுத்தலின்பேரில் கடந்த 28ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நடந்த காங்கிரஸ் சட்டப்பேரவை குழு கூட்டத்தில், அதன் தலைவராக டி.கே.சிவகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதைத் தொடர்ந்து இன்று கர்நாடக மக்கள் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெறும் நிகழ்வில் டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக பதவியேற்கிறார். அவரது அமைச்சரவையில் இடம்பிடிப்பதற்கு காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏக்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சித்தராமையாவின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த ஜார்ஜ், முனியப்பா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மீண்டும் தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக டெல்லியில் முகாமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர்.
சித்தராமையா தனது மகனும் எம்எல்சியுமான யதீந்திராவுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என மேலிடத்தை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள், கடந்த 3 ஆண்டுகளாக அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கக்கூடாது. புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
புதிய அமைச்சரவையில் சாதிவாரியாகவும், மண்டலம் வாரியாகவும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என பட்டியலின, ஓபிசி, சிறுபான்மையின பிரிவுகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். அமைச்சர் பதவி பெறுவதற்காக பிரியங்க் கார்கே, பரமேஷ்வர், ஜார்ஜ், முனியப்பா, பொன்னண்ணா, ரிஸ்வான், ஜமீர் அஹமது, ஹாரீஷ் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
துணை முதல்வருக்கு போட்டி: இதனிடையே பரமேஷ்வர், முனியப்பா, ஜமீர் அஹமது, எம்.பி.பாட்டீல், யு.டி.காதர், சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர் தங்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். சித்தராமையாவும் கர்நாடகாவில் உள்ள 4 மண்டலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தலா ஒரு துணை முதல்வர் பதவியும், அமைச்சர் பதவிகளும் பிரித்து தர வேண்டும் என கூறியதாக தெரிகிறது.