டெல்லியில் காங். மேலிட குழுவை சந்திக்கும் டி.கே.சிவகுமார்: சித்தராமையா ரியாக்ஷன் என்ன?
பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கான அதிகாரப் போட்டி நடக்கும் நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், காங்கிரஸ் மேலிடக் குழுவைச் சந்திக்க உள்ளார். இது குறித்து பேசிய முதல்வர் சித்தராமையா கூறும்போது, "இதுவரை கட்சித் தலைமையிலிருந்து எனக்கு அழைப்பு வரவில்லை" என்றார்.
கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இதனையடுத்து கடந்த நவ.29 மற்றும் டிச.2-ஆம் தேதிகளில் முதல்வர் சித்தாரமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூட்டாக உணவு அருந்தினர். அதன் பிறகு ‘தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. 2028 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டாக வேலை செய்வோம்’ என இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளதால், டி.கே.சிவகுமார் தலைமைக் குழுவை சந்திக்க டெல்லி செல்லவுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “அவரை (சிவகுமார்) போக விடுங்கள். எனக்கு அழைப்பு வந்தால் மட்டுமே உயர் தலைமையை சந்திக்கச் செல்வேன். இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை" என்று கூறினார்.
முன்னதாக, துணை முதல்வர் சிவகுமார் பேசுகையில், “நான் ஒரு தனியார் விழாவுக்காக டெல்லி செல்கிறேன். 14-ஆம் தேதி டெல்லியில் வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டம் நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 300 பேரை அழைத்துச் செல்ல வேண்டுமென அனைத்து அமைச்சர்களிடமும் கூறியுள்ளேன். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மக்களை அழைத்துச் செல்ல வேண்டும். இதுபற்றி ரயில்வே அமைச்சரிடமும் பேசியுள்ளோம். அங்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்" என்று அவர் கூறினார்.