

கொல்கத்தா உயர் நீதிமன்றம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக 32,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்த தனி நீதிபதி அமர்வு உத்தரவை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்தது.
மேற்கு வங்கத்தில் 32 ஆயிரம் ஆசிரியர்கள் 2014 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மூலம் பணியமர்த்தப்பட்டனர். இந்த நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயின் ஒற்றை பெஞ்ச், 2023 ஆண்டு மே 12 அன்று, இந்த 32,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தபபிரதா சக்ரவர்த்தி தலைமையிலான அமர்வு, அனைத்து பணி நியமனங்களிலும் முறைகேடுகள் நிரூபிக்கப்படாததால், ஒற்றை பெஞ்ச் உத்தரவை உறுதி செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தது.
மேலும், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பணி நீக்கம் செய்வது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீதிபதிகள் கூறினர்.
இந்த விவகாரத்தை விசாரிக்க உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட சிபிஐ, ஆரம்பத்தில் 264 நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக அடையாளம் கண்டுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து மேலும் 96 ஆசிரியர்களின் பெயர்கள் கண்காணிப்பின் கீழ் வந்ததாகவும் தெரிவித்தது. இதைக் கருத்தில் கொண்டு, முழு பணி நியமனத்தையும் ரத்து செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற மம்தா பானர்ஜி, “நாங்கள் நீதித்துறை செயல்முறையை மதிக்கிறோம். எங்கள் சகோதர சகோதரிகள் தங்கள் வேலைகளை மீண்டும் பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறினார்.