

புதுடெல்லி / பெங்களூரு: காங்கிரஸ் ஆதரவு பத்திரிகையான நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துகள் காங்கிரஸ் கட்சியின் யங் இண்டியன் அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டதில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரும், அமலாக்கத் துறை அதிகாரிகளும் கடந்த 2022-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 6-ம் தேதி கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு, டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர். விசாரணைக்கு ஆஜராவதற்கு நேற்று முன்தினம் அவர் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு சென்றார்.
இதுகுறித்து டி.கே.சிவகுமார் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராகுமாறு டெல்லி போலீஸ் அனுப்பிய சம்மன் தொடர்பாக எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. எனக்கு வழங்கப்பட்ட சம்மனில் வழக்கின் முதல் தகவல் அறிக்கை இணைக்கப்படவில்லை. எனவே முதல் தகவல் அறிக்கையின் நகலை கேட்டுள்ளேன்.
எனவே விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.