

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவி விவகாரத்தில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே மறைமுக போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று காலையில் முதல்வர் சித்தராமையாவுக்கு தனது இல்லத்தில் விருந்து அளித்து, உபசரித்து இருவரும் ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்தார்.
கர்நாடக முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். டி.கே.சிவகுமாரும் மறைமுகமாக அதற்காக காய் நகர்த்தி வந்தார். இதனால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் தொடர்பு கொண்டு, ஒற்றுமையாக இருக்குமாறு வலியுறுத்தியது. இதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை சித்தராமையா தனது இல்லத்தில் டி.கே.சிவகுமாருக்கு காலை விருந்து அளித்து உபசரித்தார். அப்போது இருவரும் இணைந்து கர்நாடக அரசை வழிநடத்தப் போவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் டி.கே.சிவகுமார் நேற்று காலையில் சதாசிவ நகரில் உள்ள தனது இல்லத்துக்கு முதல்வர் சித்தராமையாவை காலை விருந்துக்கு அழைத்தார். இதையடுத்து அவரது இல்லத்துக்கு சென்ற சித்தராமையாவை வரவேற்ற டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் காலில் விழுந்து வணங்கினார். காலை விருந்துக்கு பின்னர் சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் சுமார் அரை மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.
பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டி.கே.சிவகுமார் கூறுகையில், ‘‘நானும் முதல்வர் சித்தராமையாவும் இணைந்து ஒற்றுமையாக இருக்கிறோம். கர்நாடக மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது குறித்து ஆலோசித்தோம். இருவருக்கும் இடையில் எந்த மோதலும் இல்லை. 2028-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் காங்கிரஸை வெற்றி பெறச் செய்வது தொடர்பாக ஆலோசித்தோம்’’ என தெரிவித்தார்.
இரு தலைவர்களின் அடுத்தடுத்த சந்திப்பின் காரணமாக கர்நாடக அரசியலில் நிலவிய பரபரப்பு குறைந்துள்ளது.