

சித்தூர்: ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என, ஆந்திராவில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரு வாக்காளர் ஆயிரம் ரூபாயையும், கடிதத்தையும் எழுதி வாக்கு பெட்டியில் செலுத்தியதை சித்தூர் மாவட்ட ஆட்சியர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில், சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. எம்பிடிசி மற்றும் இஸட் பிடிசி என இரு முக்கிய பிரதிநிதிகளுக்கான தேர்தல் அது. இதில் ஆளும் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பாஜகவுக்கும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி இருந்தது. இதில், சித்தூர் அடுத்த பலமனேர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, 2 ஐநூறு ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு கடிதமும் இருந்ததை தேர்தல் அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அந்தக் கடிதத்தை பிரித்துப் படித்ததில், “ஐயா நீங்கள் கொடுத்த ரூ.1,000 பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பணத்தை நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்வதில் எந்த அவமானமும் இல்லை. பணத்துக்காக எனது வாக்கை ஒருபோதும் விற்க மாட்டேன். நன்றி” என எழுதப்பட்டிருந்தது. பண ஆசைக்கு உட்படாமல், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய அந்த வாக்காளர், தனக்கென வழங்கப்பட்ட பணத்தை வாக்குப்பெட்டி மூலமாகவே திருப்பி வழங்கி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு கட்சியினர் பணம் விநியோகம் செய்வதாக அடிக்கடி புகார்கள் வரும் நிலையில், இந்த வாக்காளரின் செயல் சித்தூர் மாவட்டம் முழுவதும் வேகமாக பரவியது. அனைவரும் அவரைப் பாராட்டினர். இதனையறிந்த சித்தூர் மாவட்ட ஆட்சியர் சுமித் குமார் அந்த வாக்காளரின் செயலை பாராட்டியுள்ளார். “இது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும், தேர்தல் நேர்மையையும் வெளிப்படுத்தும் செயலாகும். வாக்காளரின் நேர்மையும், ஜனநாயகத்தின் மீதான மரியாதையையும் இது எடுத்துக்காட்டுகிறது” என ஆட்சியர் பாராட்டியுள்ளார்.