

மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங், சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். படம்: பிடிஐ
புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ராஜினாமா செய்தார். அக்கட்சியின் மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளித்ததால், டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திவந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
நாடு முழுவதும் மருத்துவ இளநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்பட்டு, கடந்த 16-ம் தேதி இரவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதற்கிடையே, வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் கடந்த ஜூன் 20-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் இப்போராட்டத்தில் இணைந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக உடல்நிலை மோசமடைந்ததால், அவரை டெல்லி போலீஸார் கடந்த 18-ம் தேதி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத் தொடர்ந்து, சிஜேபி தலைவர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். கடந்த 20-ம் தேதி சிஜேபி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. அப்போது மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
டெல்லியைத் தொடர்ந்து, சென்னை, மும்பை, கொல்கத்தா, லக்னோ, பெங்களூரு, சண்டிகர், சூரத், பாட்னா, ஹைதராபாத் என பல்வேறு நகரங்களிலும் மாணவர் அமைப்பினர், இளைஞர்கள் போராட்டங்களைத் தொடங்கினர்.
பிரதமர் மோடியின் வாக்குறுதி: இந்த சூழலில், பிரதமர் மோடி கடந்த 23-ம் தேதி இரவு சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், “வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றப்படும்’’ என்று உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், ஜே.பி.நட்டா ஆகியோரை சிஜேபி நிர்வாகிகள் நேற்று முன்தினம் சந்தித்தனர். அப்போது, ‘‘நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இவற்றை பரிசீலிப்பதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட 2 பக்க அறிக்கையில், ‘தற்போதைய சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. நமது இளைஞர்கள் தீய சுழலில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
3-வது சுற்று பேச்சுவார்த்தை: இதைத் தொடர்ந்து, டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நட்டா, ஜிதேந்திர சிங்கை சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் சந்தித்து 3-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களது அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. பின்னர், அனைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:
சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா: கடந்தசில நாட்களாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதன்படி அவர் பதவி விலகி உள்ளார்.
‘போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். நீட் வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’ என்ற எங்களது கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது. ‘டெல்லி மட்டுமன்றி பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும். எதிர்காலத்தில் சிஜேபி நிர்வாகிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது’ என்றும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புக்கொண்டு உள்ளது. எனவே, போராட்டத்தை முழுமையாக வாபஸ் பெறுகிறோம். அனைத்து இளைஞர்களும் வீடு திரும்புமாறு அறிவுறுத்துகிறோம்.
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா: போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும். யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. நீட் வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்துகொண்ட மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும்.
போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக 5 அம்சக் கோரிக்கைகளை சிஜேபி முன்வைத்துள்ளது. இவற்றை பரிசீலித்து முடிவு எடுப்போம்.போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்ததை ஏற்று போராட்டத்தை சிஜேபி வாபஸ் பெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.