

திருமலை: புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால் சுவாமியை சர்வ தரிசனத்தின் வாயிலாக தரிசிக்க சுமார் 30 மணி நேரம் வரை ஆகிறது. புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை, காந்தி ஜெயந்தி, வார விடுமுறை காரணமாக ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திருமலைக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருப்பதி பேருந்து நிலையம், ரயில் நிலையம் முதற்கொண்டு, திருப்பதியில் உள்ள தேவஸ்தான சத்திரங்கள், கோயில்கள், மலைப்பாதைகள், அன்னதானக் கூடம், தலைமுடி காணிக்கை செலுத்துமிடம், லட்டு பிரசாதம் விநியோக மையம், தங்கும் அறைகள் வழங்குமிடம், தரிசனங்களுக்கு செல்லும் அனைத்து மார்க்கங்களிலும் பக்தர்கள் சாரை, சாரையாக செல்வதைக் காண முடிகிறது.
திரண்டு வரும் சாமானிய பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் விஐபி பிரேக் தரிசனம், இதர சிறப்பு தரிசன முறைகளை ரத்து செய்தாலும், கட்டுக்கடங்காமல் பக்தர்கள் திருமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சர்வ தரிசனத்திற்கு நேற்று 30 மணி நேரம் வரை ஆனதாக பக்தர்கள் தெரிவித்தனர்.