

பாஜக செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ் பஸ்வான்
பாட்னா: தொகுதி மறுவரையறை காலத்தின் தேவை என்று பாஜக செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ் பஸ்வான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதை விரிவாக பார்ப்போம்.
“தொகுதி மறுவரையறை காலத்தின் தேவை. இது அரசியலமைப்பின் செயல்முறை ஆகும். இதனை அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும். ஏனெனில் தேசத்தில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
மக்கள்தொகையின் அடிப்படையிலான தொகுதி மறுவரையறை நடவடிக்கை மூலம் தொகுதிகளை அதிகரிப்பதற்கான வழிவகை ஏற்படுகிறது. இதை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.
தொகுதி மறுவரையறை மூலம் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களுக்கு இடையே ஒருங்கிணைப்பையும் சமநிலையையும் உறுதி செய்ய முடியும். அதுவே இதன் நோக்கமாகும். அனைத்து அரசியல் கட்சிகளும் இது தொடர்பாக நேர்மறையான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
பின்னணி என்ன?
இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 81இன்படி, கடைசியாகக் கணக்கெடுத்து வெளியிடப்படும் மக்கள்தொகையின் அடிப்படையில், மக்கள் தொகைக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதாச்சாரப்படி மக்களவையில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இது 1952 பொதுத் தேர்தலில் இருந்து 1971 வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அதிகரித்துவரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அப்போதைய மத்திய அரசு நாடு தழுவிய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டுவந்து, அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டது. அதன்படி தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டு மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தியது.
அதன் விளைவு, சட்டக்கூறு 81 விதிமுறைப்படி கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 1971 தேர்தலின்போது தமிழகத்தின் மக்களவை இடங்கள் 41இலிருந்து 39 ஆகக் குறைந்தது. அதுபோலத் தென் மாநிலங்களில் சில பாதிக்கப்பட்டன.
அதன் பின் அடுத்தடுத்த ஆண்டுகளில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வைத்து இடங்களை நிர்ணயிக்கக் கூடாது என்று எழுந்த எதிர்ப்பின் காரணமாக, முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தியும் வாஜ்பாயும் முறையே 1976, 2001ஆம் ஆண்டுகளில் மக்களவைத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையைத் தற்காலிகமாக 25 ஆண்டுகள் நிறுத்திவைத்தனர். அது இன்றுவரை தொடர்கிறது.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது பல்வேறு காரணங்களால் தடைபட்டிருந்தாலும், தற்போதைய மத்திய அரசு காலக்கெடுவின்படி 2026க்குப் பிறகு கணக்கெடுப்பை நடத்துவது என்று முடிவெடுத்து, அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருந்தாலும், தொகுதி மறுவரையறை குறித்து ஆய்வு செய்யவும், தொகுதிகளின் எண்ணிக்கை குறித்தும், அவற்றின் எல்லைகள் குறித்தும் முடிவெடுக்கும் பணிகளை மத்திய அரசால் அமைக்கப்படும் தொகுதி மறுவரையறை ஆணையம் (Delimitation Commission) செய்யும். ஆணையம் அளிக்கும் பரிந்துரையின்பேரில் தொகுதி மறுவரையறை இறுதி செய்யப்படும்.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது, தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசமைப்புச் சட்டக்கூறு 81க்கு ஒரு திருத்தச் சட்ட முன்வடிவை மத்திய அரசு கொண்டுவந்தது. அது மக்களவையில் தோல்வி அடைந்த நிலையில், உள் துறை அமைச்சர் அமித் ஷா ஒரு சமரசத் தீர்வாக எல்லா மாநிலங்களுக்கும் சம வாய்ப்பாக 50% விகிதாச்சார ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர அவகாசம் கேட்டுக் கோரிக்கை வைத்தார்.
மத்திய அரசு உறுதியளிக்கும் இத்திட்டத்தின்படி அனைத்து மாநிலங்களுக்கும் 50% விகிதாச்சார ஒதுக்கீடு கொண்டுவந்தால், தமிழகத்தின் தற்போதுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39இல் இருந்து 59ஆக உயரும். இதேபோல் உத்தரப் பிரதேசத்தின் 80 தொகுதிகள் 120ஆக இருக்கும்.
இதன்படி இவ்விரு மாநிலங்களுக்கு இடையிலான தொகுதிகளின் எண்ணிக்கை வித்தியாசம் 41இல் இருந்து 61ஆக அதிகரிக்கும். இதன் காரணமாக மக்களவையில் மசோதாக்களுக்கு வாக்களிக்கும்போது தமிழகத்தைவிட உத்தரப் பிரதேசத்துக்கு 20 வாக்குகள் கூடும். அதுபோலவே இந்தி பேசும் பெரிய வட மாநிலங்களின் வாக்குகளும் கூடும் வாய்ப்பு ஏற்படும்.
ஆனால், தமிழகம் உட்பட தென் மாநிலங்களுக்கு வாக்குகளின் உயர்வில் சமநிலை ஏற்படாது. இடங்களில் வேண்டுமானால் சமவாய்ப்பு இருப்பதுபோலத் தோன்றும். ஆனால், வாக்குகளில் சமநிலை எட்டப்படாது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.