

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா | கோப்புப்படம்
புதுடெல்லி: தமிழகத்தில் பல முன்னாள் முதல்வர்களுக்கு நினைவு நாணயங்கள் வெளியாகி உள்ளன. காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரை தொடர்ந்து கடைசியாக கடந்த 2024-ல் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட்டது.
இதற்கு முன்னதாகவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்று அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மனு அளித்திருந்தார். அதிமுகவின் இந்த கோரிக்கை மத்திய நிதி அமைச்சகத்தில் இன்று வரை நிலுவையில் உள்ளது. ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றவர் என்பது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்தியில் ஆட்சிக்கு தலைமை வகிக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதன் பலனாக அதிமுகவின் கோரிக்கை தற்போது ஏற்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறுகையில், “முன்னாள் முதல்வர்களில் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியான நிலையில் ஜெயலலிதாவுக்கானது நிலுவையில் இருப்பது அதிமுகவுக்கு அரசியல் நெருக்கடியை அளித்துள்ளது. சமீபத்தில் சென்னை வந்த தமிழக பாஜக பொறுப்பாளர், அமைச்சர் பியூஷ் கோயலிடமும் நினைவு நாணய கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
இதனால் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு அரசியல் லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சிக்கு உள்ளது. வரும் பிப்ரவரி 24-ல் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நினைவு நாணயம் வெளியிடப்பட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தன.
இந்தியாவில் நினைவு நாணயம் வெளியிடும் முறை கடந்த 1964-ல் தொடங்கியது. நாட்டின் முதல் பிரதமர் நேருவுக்காக முதல் நினைவு நாணயம் வெளியானது. இதைத் தொடர்ந்து நினைவு நாணயங்கள் முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமின்றி முக்கிய நிகழ்வுகளுக்கும் வெளியானது. இவற்றில் சில நாணயங்கள் மக்களிடையே புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. சில நாணயங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்கானதாக இருந்தன.
நினைவு நாணயம் தொடர்பான கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடப்படுகிறது.