

டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் சித்திக்கி.
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் ஜவாத் அகமது சித்திக்கியை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில், குண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்த காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி, அல் பலா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பேராசிரியர் என்பதால், இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகத்துக்கு உள்ள தொடர்பு குறித்து என்ஐஏ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் பல்கலைக்கழக நிறுவனர் ஜவாத் அகமது சித்திக்கி கைது செய்யப்பட்ட நிலையில், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை அவரிடம் விசாரணை நடத்தியது. கடந்த நவ.19-ம் தேதி சித்திக்கியை, 13 நாள் காவலில் எடுத்த அமலாக்கத் துறை, அவரது விசாரணைக் காவல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இதையடுத்து, அவரை டிச.15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஷீத்தல் சவுத்ரி பிரதான் உத்தரவிட்டார்.
சித்திக்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள் மற்றும் கண் கண்ணாடி ஆகியவை கிடைக்க அனுமதிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, சித்திக்கிக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள் குறித்த விவரங்களை நீதிபதியிடம் அமலாக்கத் துறைஅளித்தது.
"அல் பலா பல்கலைக்கழகம் யுஜிசி அங்கீகாரம் பெற்றது என்றும் என்ஏஏசி அங்கீகாரம் பெற்றது என்றும் மாணவர்களுக்கு தவறான தகவல்களை அளித்துள்ளது. கடந்த 2018 முதல் 2025 வரை இந்த நிறுவனம் ரூ.415.10 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த தொகை, அதன் உண்மையான வருமானத்துடன் பொருந்தவில்லை. மேலும், மாணவர் கட்டணம், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தொகை ஆகியவை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு சித்திக்கி திருப்பி விட்டுள்ளார். அவர்தான், அல் பலா பல்கலைக்கழகம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலராக உள்ளார். அவரை கைது செய்த அன்று, டெல்லி உள்பட 19 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.48 லட்சம் பணம் கிடைத்தது" என நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்தது.
சித்திக்கின் நீதிமன்றக் காவல் டிச.15ம் தேதி முடிவடையும் என்பதால் அன்றைய தேதிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.