டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 4 பேர் கைது - என்ஐஏ நடவடிக்கை

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அழைத்து வரப்பட்டனர்.

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அழைத்து வரப்பட்டனர்.

Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மூன்று மருத்துவர்கள் உட்பட 4 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. இதன்மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி, கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு மூலம் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டார். இதில், சம்பவ இடத்திலேயே உடல் சிதறி அவர் உயிரிழந்தார். இந்த வெடிவிபத்தில், சாலையில் பயணித்த மேலும் 13 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு குறித்த வழக்கை முதலில் டெல்லி போலீசார் மேற்கொண்ட நிலையில், இதன் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் இதனை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைத்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை என்ஐஏ அமைத்தது.

குண்டுவெடிப்பு குறித்து தீவிரமாக விசாரணை நடத்திய என்ஐஏ சிறப்பு விசாரணைக் குழு, இது ஒரு தீவிரவாத தற்கொலை தாக்குதல் என அறிவித்தது. மேலும், இந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய கார் உரிமையாளர் அமிர் ரஷித் ஆல்வியை என்ஐஏ கடந்த 16-ம் தேதி கைது செய்தது.

இதனையடுத்து, கடந்த 17-ம் தேதி இந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொழில்நுட்ப உதவிகளை வழங்கிய டேனிஷ் எனும் ஜசிர் பிலால் வானியை என்ஐஏ கைது செய்தது. காஷ்மீரைச் சேர்ந்த இவர், குண்டுவெடிப்பை நிகழ்த்திய தற்கொலையாளி உமர் நபியுடன் இணைந்து இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டதாக என்ஐஏ தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் முஜாம்மில் ஷகீல் கனை, அனந்தநாக்-கைச் சேர்ந்த மருத்துவர் அதீல் அகமது ராதர், உத்தரப் பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த மருத்துவர் ஷாஹீன் சயீத், ஜம்மு காஷ்மீரின் சோபியானைச் சேர்ந்த முஃப்தி இர்பான் அகமது வாகே ஆகிய நான்கு பேரை என்ஐஏ இன்று கைது செய்துள்ளது. டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் இவர்கள் நான்கு பேரையும் என்ஐஏ காவலில் எடுத்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் தொடர்புடைய ஒவ்வொரு நபரையும் அடையாளம் காண்பதற்கான முயற்சியில் பிற பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

<div class="paragraphs"><p>டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அழைத்து வரப்பட்டனர்.</p></div>
முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் வாழ்த்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in