

தேஜஸ்வி யாதவ் |கோப்புப் படம்
பாட்னா: பிஹார் முதல்வராக மீண்டும் பதவியேற்ற நிதிஷ் குமாருக்கும், புதிய அமைச்சர்களுக்கும் தேஜஸ்வி யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்ததை அடுத்து, பொதுவெளியில் அவர் எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார். இந்நிலையில், பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றதை அடுத்து, அவருக்கும் அவரது அமைச்சரவைக்கும் தேஜஸ்வி யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிஹார் முதல்வராக பதவியேற்றுள்ள மதிப்புக்குரிய நிதிஷ் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற பிஹார் அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய அரசாங்கத்தின் மீதான தனது நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். “புதிய அரசாங்கம் தனது வாக்குறுதிகளையும் அறிவிப்புகளையும் பொறுப்புடன் நிறைவேற்றும், மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படும், பிஹார் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் தரமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்" என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார். துணை முதல்வர்களாக சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் பதவியேற்றனர். மேலும், 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில், பாஜக 14, ஐக்கிய ஜனதா தளம் 8, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 2, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா - 1, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா - 1 என மொத்தம் 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெளியிட்ட பதிவில், "தேர்தலில் வெற்றி தோல்வி தவிர்க்க முடியாதது என தெரிவித்திருந்தது. பொது மக்களுக்கான சேவை என்பது ஒரு இடைவிடாத செயல்முறை, முடிவில்லாத பயணம். இதில் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை. தோல்வியால் துக்கமடைவதும் இல்லை, வெற்றியால் ஆணவம் கொள்வதும் இல்லை. ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஏழைகளின் கட்சி. அது தொடர்ந்து ஏழைகளுக்காக தனது குரலை ஓங்கி ஒலிக்கும்" என ராஷ்ட்ரிய ஜனதா தள எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அதேநேரத்தில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.