

இளையராஜா
புதுடெல்லி: பதிப்புரிமை உத்தரவை மீறியதற்காக இசையமைப்பாளர் இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி சரிகமா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் சரிகமா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக தொடுத்த பதிப்புரிமை வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சரிகமா உரிமை கோரும் பதிப்புரிமை பெற்ற பாடல்களுக்கு இளையராஜா உரிமை கொண்டாடவோ, பயன்படுத்தவோ அல்லது பிறர் பயன்படுத்த உரிமம் வழங்கவோ, மூன்றாம் நபரிடமும் உரிமை கோரவோ கூடாது என இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் சரிகமா வசம் உரிமம் உள்ள பாடல்களை பயன்படுத்திய நிலையில், அப்பாடல்களின் உரிமையைத் தமக்குரியது என்று அந்நிறுவனங்களிடம் இளையராஜா உரிமை கோரியுள்ளார், இதன் மூலம் அவர் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார்.
மேலும், ‘முரட்டுக் காளை’ படத்தில் இடம்பெற்ற ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என்ற பாடலின் உரிமையைத் தமக்குரியது என்று கூறி, ‘பியாண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனத்திற்கு எதிராக இளையராஜா ஜூன் 23-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அதில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு மற்றும் அமலில் உள்ள தடை உத்தரவு குறித்த தகவலை மறைத்து பாடலை பயன்படுத்த இடைக்காலத் தடை உத்தரவு பெற்றார். பின்னர் அந்த பாடலின் உரிமம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்பட்டதால் அந்த பாடலுக்கான தடை உத்தரவு நீக்கப்பட்டது.
இளையராஜாவின் நடவடிக்கைகள் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதோடு, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலும் ஆகும். இளையராஜாமீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் வேண்டும்.
இந்த உத்தரவு மீறலுக்காக இளையராஜாவை சிறையில் அடைப்பதோடு, அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவற்றை விற்று, அதன் மூலம் கிடைக்கும் தொகையை சரிகமா நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனுப் ஜெயராம் பம்பானி முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுவை பரிசீலித்த நீதிபதி, இது தொடர்பாக இளையராஜா பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.