

புதுடெல்லி: நடைபாதையில் குடிசைகளையோ, கடைகளையோ கட்டுவது சட்ட விரோதம் எனக்கூறிய டெல்லி உயர் நீதிமன்றம், பாதசாரிகள் நடப்பதற்காக மட்டுமே நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அதனை ஆக்கிரமிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் லோஹர் பஸ்தி, லால் பாக், ஆசாத் நகர், விகாஸ் சமிதி, உள்ளிட்ட இடங்களில் பொது இடத்தை ஆக்கிரமித்தும், நடைபாதையை ஆக்கிரமித்தும் கட்டப்பட்டிருந்த குடிசை கள், கடைகள் உள்ளிட்ட வற்றை இடித்து அகற்றும் நடவடிக்கையை பொதுப்பணித்துறை, மாநகராட்சி இணைந்து எடுத்தது.
இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கவும், கட்டுமானங்களை இடிப்பது தொடர்பாக வழங்கப்பட்ட நோட்டீசை சட்டவிரோதம் என ரத்து செய்யக்கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பகுதி மக்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்மீத் சிங் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடைபாதையில் குடிசைகளையோ, கடைகளையோ கட்டுவது சட்ட விரோதம் ஆகும், நடைபாதைகளில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.
மேலும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, பாதசாரிகள் நடப்பதற்காக மட்டுமே நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன, எனவே நடைபாதைகளை எந்த காரணத்துக்காவும் ஆக்கிரமிப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மேற்கூறிய காரணங்களுக்காக, இந்த மனுவை விசாரிக்க விரும்பவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
ஆனால் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் ராகவேந்திர உபாத்யாய் ஆஜராகி, இந்தப் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு மறுவாழ்வு திட்டம் செயல்படுத்தும் வரை குடிசைகளையும், கடைகளை இடித்து அகற்ற தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஆக்கிரமிப்புகளை இடிப்பதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது, ஆனால் மறுவாழ்வு திட்டம் செயல்படுத்துவது குறித்தகோரிக்கையை அரசு நான்கு வாரத்தில் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.