

புதுடெல்லி: நீட் மறுதேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடை செல்லும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தற்காலிக தடையை எதிர்த்த டெலிகிராம் செயலி நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
நீட் மறுதேர்வை முன்னிட்டு ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெலிகிராம் செயலி நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தேஜஸ் கரியா விசாரித்தார்.
இந்த வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “டெலிகிராம் செயலியின் ஒரு பயனாளர் 40 பாட் கணக்குகளை உருவாக்க முடியும். ஆனால், வாட்ஸ்அப் செயலியில் ஒரு கணக்கை மட்டுமே உருவாக்க முடியும். டெலிகிராமில் உருவாக்கப்படும் பாட் வாயிலாகத் தகவல்களை மொத்தமாகப் பகிர முடியும். வாட்ஸ்அப் செயலி, ஃபேஸ்புக் போன்றவற்றில் இத்தகைய பிரச்சினை இல்லை.
மேலும், டெலிகிராம் செயலி கிளவுட் தொழில்நுட்பத்தில் இயங்குவதால் ஒரு கணக்கை முடக்கினால் கூட யாரோ ஒருவர் தொடர்ந்து அந்தக் கணக்கை வேறு பெயரில் இயக்க முடியும். சிபிஐ, காவல் துறை போன்ற அமைப்புகள் அசல் பயனாளரைக் கண்டுபிடிக்க முடியாது. பயங்கரவாத செயல்களுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுகிறது.
டெலிகிராம் செயலியின் கட்டுமானமும், பல்வேறு நாடுகளின் சட்டங்களை உள்ளடக்கியுள்ளதாலும் தேசிய புலனாய்வு முகமை போன்ற விசாரணை அமைப்புக்குச் சவாலாக உள்ளது. இதுபோன்ற காரணங்களை கொண்டே டெலிகிராம் செயலி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதி தேஜஸ் கரியா குறுக்கிட்டு, “குறிப்பிட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக 15 கோடி மக்களின் உரிமைகளை எப்படி தடுக்க முடியும்? யாரோ ஒருவரின் உரிமைகளைப் பாதுகாக்க யாரோ ஒருவரின் உரிமைகளை தடுக்க முடியுமா? வினாத்தாள் கசிவு தடுப்பு என்ற பெயரில் ஒட்டுமொத்த செயலியை முடக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அனுராதா பசின் வழக்கில் உச்ச நீதிமன்றமே சமூக வலைதளங்களை முடக்க அனுமதித்து தீர்ப்பு அளித்துள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதால்தான் டெலிகிராம் செயலி தற்காலிகமாக முடக்கப்பட்டு உள்ளது” என்று வாதிட்டார்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி கூறும்போது, “கடமையைச் சரிவர ஆற்றாதவர்கள் சட்டவிதிகள் குறித்து பேசக் கூடாது. டெலிகிராம் செயலி என்பது தனக்கு தானே அழிவைத் தேடும் படைப்புக்கு ஈடானது. வினாத்தாள் கசிவு போன்றவற்றை நமது நாட்டில் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் எவ்வித தவறும் இல்லை” என்று வாதிட்டார்.
டெலிகிராம் செயலி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துருவ் மேத்தா கூறும்போது, “அனுராதா பசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்த விவகாரத்தில் பொருத்த முடியாது. டெலிகிராம் செயலிக்கு விதித்த தடை அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. இந்தத் தடையை நீக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி தேஜஸ் கரியா, “தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69ஏ பிரிவின் கீழ் டெலிகிராம் போன்ற செயலியை முடக்க அதிகாரம் உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மறுதேர்வு முடியும் வரை, நெருக்கடியை கருத்தில் கொண்டு டெலிகிராம் செயலி முடக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் உத்தரவு சரியானதே. எனவே, டெலிகிராம் செயலியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தீர்ப்பளித்தார்.