

புதுடெல்லி: டெல்லியில் சாலை விபத்தில் சிக்கியவர்களை 1 மணி நேரத்துக்குள் மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு டெல்லி அரசு ரூ.25,000 பரிசு வழங்க உள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் ‘ரஹ்-வீர்’ திட்டத்தை தலைநகரில் செயல்படுத்த உள்ளதாக டெல்லி அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. விபத்தில் காயம் அடைந்தவர்களை காப்பாற்ற முதல் 1 மணி நேரம் ‘கோல்டன் ஹவர்’ என்று அழைக்கப்படுகிறது.
அந்த ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்பவருக்கு ரூ.25,000 பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் ‘ரஹ்-வீர்’ திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. இந்த திட்டத்தை டெல்லியில் செயல்படுத்த உள்ளதாக முதல்வர் ரேகா குப்தா அறிவித்தார்.
நிபந்தனைகள்: விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரை காப்பாற்றுவோருக்கு மட்டுமே இந்தப் பரிசு வழங்கப்படும். ஒரு விபத்தில் எத்தனை பேரை மீட்டாலும் மீட்பவருக்கு ரூ.25,000 வழங்கப்படும். இவ்வாறு உதவி செய்வோரில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 10 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுடன் தேசிய விருது வழங்கப்படும்.