புதுடெல்லி: டெல்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு, பழுதுபார்க்கும் பணியின்போது தண்ணீர் தேங்கி இருந்ததே காரணம் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சத்ய நிகேதன் பகுதியில் ஆண் மாணவர்களுக்கான தனியார் விடுதியாக செயல்பட்டு வந்த 6 மாடி கட்டிடம் ஒன்று நேற்று மதியம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தை நேற்றும் இன்றும் நேரில் பார்வையிட்ட முதல்வர் ரேகா குப்தா, மீட்புப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வந்தார்.
மேலும், கவனக்குறைவாக இருந்த அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “சத்யா நிகேதனில் நிகழ்ந்த துயரமான சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி மாநகராட்சியின் துணை ஆணையர், நிர்வாகப் பொறியாளர், மேற்பார்வைப் பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்டிட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி முழுவதும் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள 5 தளங்களைக் கொண்ட கட்டிடங்களுக்கு உடனடியாக சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அருகில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் கட்டிடங்களும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கட்டிடங்களுக்கு சீல் வைப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
டெல்லி அரசு இச்சம்பவத்தை மிகுந்த தீவிரமாகக் கையாண்டு வருகிறது. இதில் தவறு செய்தவர்கள் அல்லது பொறுப்பானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ரேகா குப்தா, “கிட்டத்தட்ட 80% கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு விட்டன. கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. பழைய கட்டிடமான இங்கு பழுதுபார்க்கும் பணியின்போது தண்ணீர் தேங்கியதே கட்டிடம் இடிந்துவிழக் காரணமாக இருந்துள்ளது.
காயமடைந்த 6 பேரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாதவாறு அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.