மே. வங்கத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட பயிற்சி மருத்துவரின் நினைவு நாளில் மவுன அஞ்சலி

மே. வங்கத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட பயிற்சி மருத்துவரின் நினைவு நாளில் மவுன அஞ்சலி
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 2024-ல் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அம்மாநிலத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவரது நினைவு நாளையொட்டி கொல்கத்தாவின் வடக்கு பகுதியில் உள்ள சித்பூரில் மருத்துவ முகாம் ஒன்றை எளிய மக்களுக்காக இன்று ஏற்பாடு செய்துள்ளனர் மேற்குவங்க ஜூனியர் மருத்துவ சங்கத்தினர். கடந்த 2024, ஆக.9-ம் தேதி பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்து, மாநில அளவில் பெருந்திரள் போராட்டத்தை இந்த மருத்துவக் குழுவினர் ஒருங்கிணைந்து முன்னெடுத்து போராடியது குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் மரணத்துக்கு நீதி கோரி இந்த மருத்துவ முகாமை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம் என முகாமில் பங்கேற்ற மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

மேற்குவங்க மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் என கொலை செய்யப்பட்ட மருத்துவரின் நினைவாக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

மாநில சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தலைமையகத்தில் மேற்குவங்க அமைச்சர் ஷரத்வாத் முகர்ஜி மற்றும் அதிகாரிகளும் மவுன அஞ்சலி செலுத்தினர்.

படுகொலை சம்பவம் நடந்த கொல்கத்தாவின் வடக்கு பகுதியில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடன் பாதுகாப்பு பணியில் இருந்த படை வீரர்களும் பயிற்சி மருத்துவருக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அந்த மருத்துவமனை மத்திய படை வீரர்களின் பாதுகாப்பில் உள்ளது.

இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவரை 2024-ல் போலீஸார் கைது செய்தனர். நீதிமன்ற விசாரணையில் அவர் குற்றவாளி என தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ஆயுள் வரை சிறை தண்டனை விதித்தது சீல்டா நீதிமன்றம்.

இருப்பினும் இந்த வழக்கில் சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளி அல்ல. வேறு சிலரும் இதில் ஈடுபட்டிருக்க கூடும் என்று உயிரிழந்த பயிற்சி மருத்துவரின் பெற்றோர் மற்றும் சக மருத்துவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த விவகாரம் இப்போது சிபிஐ விசாரணையில் உள்ளது.

கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் தாயார், கடந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மே. வங்கத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட பயிற்சி மருத்துவரின் நினைவு நாளில் மவுன அஞ்சலி
மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணி - இதுவரை 1.5 கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in