

புதுடெல்லி: பிரபல தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலா துருக்கியின் இஸ்தான்புல்லில் கைது செய்யப்பட்டார். அவரை துருக்கி அரசு நேற்று அதிகாலை இந்தியாவுக்கு நாடு கடத்தியது.
டெல்லி, ஆர்.கே.புரத்தில் என்சிஆர்பி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள டோலா, மும்பை காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். மும்பை டோங்ரியைச் சேர்ந்த டோலா, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து தப்பியோடினார். வெளிநாடுகளில் இருந்து பன்னாட்டு போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்தார்.
மும்பை டோங்ரியை சேர்ந்த ஃபைசல் ஜாவேத் ஷேக், அவரது மனைவி அல்ஃபியா ஃபைசல் ஷேக் ஆகியோரால் கையாளப்பட்ட போதைப்பொருள் விற்பனை வருவாய் குறித்த விசாரணையின்போது, டோலாவின் பங்கு வெளிச்சத்துக்கு வந்தது. மும்பை போலீஸ் விசாரணையில் மெஃபெட்ரான் விநியோகச் சங்கிலி மகாராஷ்டிராவின் சாங்லி மற்றும் சூரத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கி வரை நீள்வது கண்டறியப்பட்டது.
அங்கு டோலா தனது கூட்டாளிகள் மூலம் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவது தெரியவந்தது. கடந்த ஆண்டு இன்டர்போல் உதவியுடன், டோலாவின் மகன் தாஹிர், மருமகன் முஸ்தபா முகமது குப்பாவாலா ஆகியோரை ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து அதிகாரிகள் நாடு கடத்தி, டோலாவின் வலையமைப்பை பலவீனப்படுத்தினர். இந்நிலையில் தற்போது டோலாவை கைது செய்துள்ளனர்.