தீவிர புயலாக வலுப்பெற்றது ‘முரசு’ - நாளை காலை நெல்லூர் அருகே கரையை கடக்கும்

இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு
தீவிர புயலாக வலுப்பெற்றது ‘முரசு’ - நாளை காலை நெல்லூர் அருகே கரையை கடக்கும்
Updated on: 
2 min read

புதுடெல்லி: மேற்கு - மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த முரசு புயல், இன்று அதிகாலை தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து வடகிழக்கே 180 கி.மீ. தொலைவில் உள்ள இந்த புயல், இன்று நள்ளிரவு முதல் நாளை (நவ. 3) அதிகாலை வரையிலான நேரத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியா பெயரிட்டுள்ள ‘முரசு’ புயல், வங்கக் கடலில் நேற்று உருவானது. மேற்கு - மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த முரசு புயல், இன்று அதிகாலை தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. தீவிர சூறாவளி புயலான முரசு, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, இது மேற்கு - மத்திய வங்கக் கடலில் 14.1 டிகிரி வடக்கு அட்சயநேகை மற்றும் 81.4டிகிரி கிழக்கு தீர்க்க ரேகைக்கு அருகில் மையம் கொண்டுள்ளது. இது ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூரில் இருந்து கிழக்கு - தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும், ஓங்கோலில் இருந்து தென்கிழக்கே 210 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்தில் இருந்து தெற்கே 240 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து வட கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று (நவ. 2) நள்ளிரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையிலான காலகட்டத்தில் நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே ஓங்கோலுக்கு தெற்கே தீவிர சூறாவளிப் புயலாக ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைக் கடக்கக்கூடும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 120 கி.மீ. வேகத்திலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் சென்னைக்கு வட கிழக்கே 180 கி.மீ. தொலைவில் உள்ளதால், சென்னையின் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை செய்து வருகிறது. இதனால், நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாதவரத்தில் 11 செ.மீ. மழையும், எண்ணூர் துறைமுகம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் தலா 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் தங்கள் விமான நிறுவனங்ளைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தெலங்கானாவின் ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்சு எச்சரிக்கையும், ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தீவிர புயலாக வலுப்பெற்றது ‘முரசு’ - நாளை காலை நெல்லூர் அருகே கரையை கடக்கும்
திருச்சி வந்த முதல்வருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு

X